பிரான்ஸ் விமானநிலையத்தில் வேலை! அதன் பின் இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: எச்சரிக்கை செய்தி
பிரான்ஸ் விமானநிலையத்தில் வேலை என்று நம்பிய பெண் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது.
இந்தியாவின் புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்லின் மேரி. இவர் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரி என்று அறிமுகப்படுத்தி பிரான்ஸ் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு தனது வங்கி கணக்கில் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதை அப்படியே நம்பிய அந்த பெண்ணும், அவர் சொன்ன வங்கிக் கணக்கில் அவர் சொன்ன பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பின் அந்த நபர் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் உடனடியாக இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்,
அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொண்ட தொலைப்பேசி எண் மற்றும் வங்கிக் கணக்கை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போது, அது பெங்களுர் எலஹன்கா பகுதியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டைவோ அத்வேலை (31) என்பது தெரியவந்தது.
உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அவரை கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், வரும் திங்கட் கிழமை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பின்னரே வேறு யாரும் இது போன்று ஏமாற்றப்பட்டுள்ளனரா என்பது தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.