அமெரிக்க ராணுவ உதவி விமானங்களுக்கு அனுமதி: ஆனால்... பிரான்ஸ் விதித்துள்ள நிபந்தனை
அமெரிக்க ராணுவ உதவி விமானங்கள் பிரான்சிலுள்ள விமான தளங்களை பயன்படுத்திக்கொள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அனுமதியளித்துள்ளார்.
ஒரு நிபந்தனை
ஆனால், அப்படி பிரான்சிலுள்ள விமான தளங்களை பயன்படுத்திக்கொள்ளும் அமெரிக்க விமானங்களுக்கு ஒரு நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, அந்த விமானங்கள் ஈரான் மீது தாக்குதலில் ஈடுபடும் விமானங்கள் அல்ல என முழு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சக பிரதிநிதியான ஆலிஸ் ருஃபோ என்பவர், நேட்டோ கட்டமைப்பில் இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்கிறார்.
அதாவது, பிரான்சிலுள்ள விமான தளங்களில் எரிபொருள் நிரப்ப வரும் அமெரிக்க விமானங்கள், வளைகுடா நாடுகளில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் விமானங்கள்தான், அவை ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்க விமானங்கள் அல்ல என்பதை உறுதி செய்துகொள்கிறோம் என்கிறார் ஆலிஸ்.
அத்துடன், இந்த நிபந்தனையை அமெரிக்கா மதித்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளபோதிலும், ஆரம்பம் முதலே, பிரான்சின் நடவடிக்கைகள் பாதுகாப்புக்காக மட்டுமே, தாக்குதல் நடத்துவதற்காக அல்ல என அவர் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |