மூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிக்குமா பிரான்ஸ்?: இன்று வெளியாகிறது முக்கிய தகவல்
பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமாஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில், அது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 6 மணியளவில் பிரான்ஸ் அரசாங்கம் நாட்டின் கொரோனா நிலவரம் மற்றும் புதிதாக கட்டுப்பாடுகள் விதித்தல் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளது.
இந்த வாரம் அரசு இரண்டு விடயங்களை உற்றுக் கவனிக்கிறது. ஒன்று, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா அதிகரித்துள்ளதா என்பது.
இரண்டு, புதிய திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவல் குறித்தது.ஒருவேளை பொதுமுடக்கம் அறிவிக்கப்படவில்லை என்றால், உள்ளூர் மட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
ஏற்கனவே 25 பகுதிகளில் 6 மணிக்கு மேல் அமுலில் இருக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம். அல்லது 6 மணிக்கு மேல் ஊரடங்கும், வார இறுதிகளில் பொதுமுடக்கமும் அறிவிக்கப்படலாம். அதாவது, பொருளாதாரத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது, பள்ளிகள் ஓரளவு சாதாரணமாக இயங்கவேண்டும், ஆனால், வார இறுதியில் மக்கள் எங்கேயும் கூடக்கூடாது என்பதுதான் திட்டம்.
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குள் நுழைய தற்போது கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என சான்றிதழ் வைத்திருப்போருக்கு மட்டுமே நாட்டுக்குள் நுழைய அனுமதி உள்ளது.
இந்த விதி மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள்ளும் Schengen பகுதிக்கும் இந்த கட்டுப்பாடு இல்லை. ஆனால், இனி எல்லா நாடுகளிலிருந்து வருவோருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.