ஜனவரி 1 முதல் பிரான்சில் இந்த பொருட்களுக்குத் தடை
அடுத்த ஆண்டு, அதாவது 2023, ஜனவரி மாதம் 1ஆம் திகதிமுதல், பிரான்ஸ் உணவகங்களில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
எந்தெந்த பொருட்களுக்குத் தடை
உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவு உண்பதற்கும், உணவு வாங்கிச் செல்வதற்கும் பயன்படுத்தக்கூடிய, ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு வீசி எறியக்கூடிய பிளேட்கள், கப்கள் முதலான பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளது.
என்ன பிரச்சினை?
பிரான்சில் சுமார் 30,000 பாஸ்ட் புட் உணவகங்கள் உள்ளன. அவை ஆண்டொன்றிற்கு ஆறு பில்லியன் முறை உணவு வழங்குகின்றன. ஆக, அவற்றால் 180,000 தட்டுகள், கப்கள் முதலான குப்பை உருவாகிறது.
அடுத்த ஆண்டு முதல் இந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ள நிலையில், இந்த தடைச் சட்டத்தை ஐரோப்பிய பேப்பர் தட்டுக்கள் தயாரிக்கும் அமைப்பு விமர்சித்துள்ளது.
AFP
அதாவது, பெரும்பாலான ஒருமுறை பயன்படுத்திவிட்டு வீசி எறியும் தட்டுக்கள் முதலான பொருட்கள் மறுசுழற்சி செய்ய இயலும் பொருட்களால்தான் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அவை 82 சதவிகித மறுசுழற்சி வீதம் கொண்டவையாகவும் உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
அத்துடன், கழுவி பயன்படுத்தும் தட்டுக்கள் முதலானவற்றை தயாரிப்பதும் கழுவி சுத்தம் செய்வதும் அதிக ஆற்றல் மற்றும் தண்ணீர் செலவாக வழிவகை செய்யும் என்றும் அந்த அமைப்பு கூறுகிறது.
உணவகங்களைப் பொருத்தவரை, மறுசுழற்சி செய்யக்கூடிய கப்களை வாடிக்கையாளர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றுவிடுவதாகவும், தட்டுக்களை திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக குப்பையில் வீசிவிடுவதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.