பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒப்பந்தம்: பிரான்ஸ் அழைப்பு
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது
இது தொடர்பாக சனிக்கிழமையன்று பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில், புலம்பெயர்தல் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை துவக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பிரெக்சிட் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்போது, Mr. Michel Barnier அதைச் செய்யவில்லை என்று கூறும் Darmanin, நாம் ஒரு ஒப்பந்தம் குறித்து பேச வேண்டியுள்ளது என்றார்.
பிரெக்சிட் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர் இந்த Barnier. அவர் தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
ஆங்கிலக்கால்வாய் வழியாக புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் கடத்தப்படும் ஒரு பிரச்சினை பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் தொடர்ந்து உரசல்களை ஏற்படுத்திவருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 15,400 புலம்பெயர்வோர் ஆங்கிலக் காலவாயைக் கடக்க முயன்றுள்ளார்கள். 2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 50 சதவிகிதம் அதிகம் என பிரான்ஸ் எல்லை பாதுகாப்புப்படையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், புலம்பெயர்வோர் கடத்தலைத் தடுக்க பிரான்சுக்கு கொடுப்பதாக பிரித்தானியா கூறியிருந்த தொகை இதுவரை கொடுக்கப்படாததால், பிரான்ஸ் தரப்பு பிரித்தானியா மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.