பிரான்சுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் என்ன பிரச்சினை?
பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் இருவரை ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் பொலிசார் கைது செய்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தூதரக அதிகாரிகளை கைது செய்த இஸ்ரேல் பொலிசார்
ஜெருசலேமில், பிரான்சுக்கு சொந்தமான Church of the Pater Noster என்னும் தேவாலயம் ஒன்று உள்ளது. 150 ஆண்டுகளாக அந்த தேவாலயம் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், காசா போர் நிறுத்தம் மற்றும் லெபனான் பிரச்சினைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணுதல் ஆகிய விடயங்களுக்காக இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் (Jean-Noël Barrot) இஸ்ரேல் சென்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து, பாரட் அந்த தேவாலயத்துக்கு செல்வதாக இருந்தது. ஆனால், ஆயுதம் தாங்கிய இஸ்ரேல் பொலிசார், அந்த தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து காவலில் வைத்தனர்.
அமைச்சர் பாரட் தலையிட்டபிறகே அந்த தூதரக அதிகாரிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த தேவாலயத்துக்குச் செல்லும் திட்டத்தையே ரத்து செய்துவிட்டார் பாரட்.
பிரான்சுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் என்ன பிரச்சினை?
இப்படி பிரான்சுடன் இஸ்ரேல் அதிகாரிகள் உரசிக்கொள்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2020ஆம் ஆண்டு, ஜெருசலேமிலுள்ள மற்றொரு ஆலயத்துக்குள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் செல்ல முற்பட்டபோது, இஸ்ரேல் அதிகாரிகள் தாங்களும் அவருடன் செல்வோம் என வற்புறுத்த, மேக்ரான் பொறுமையிழந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

1996ஆம் ஆண்டு, அப்போதைய பிரான்ஸ் ஜனாதிபதியான Jacques Chirac இஸ்ரேல் சென்றிருந்தபோது, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தன்னைப் பிடித்து தள்ளியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இத்தனைக்கும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் துவங்கிய நேரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
ஆனால், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை இஸ்ரேல் தவிர்க்கவேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் போக்கு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        