பிரெஞ்சு ஜனாதிபதியை ஹிட்லராக சித்தரித்து அவமதித்த நபர்! குற்றவாளி என அபராதம் விதிப்பு..
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அடோல்ஃப் ஹிட்லராக சித்தரித்த 62 வயது நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கோவிட் -19 கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அடோல்ஃப் ஹிட்லராக சித்தரித்து அவமதித்த 62 வயது முதியவர் குற்றவாளி என்று வெள்ளிக்கிழமை பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னாள் விளம்பர நிர்வாகியான மைக்கேல்-ஏஞ்ச் ஃப்ளோரி (Michel-Ange Flori) தெற்கு பிரான்சில் ஒரு விளம்பர பலகையில் ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் போல் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானை சித்தரித்திருந்தார்.
இதற்காக அவர்க்கு 10,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Picture: AFP
இது குறித்து ஃப்ளோரி, "இதை என்னால் நம்ப முடியவில்லை, கேலிச்சித்திரத்திற்கான உரிமை இன்று புதைக்கப்பட்டது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், டூலனில் உள்ள நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு, மேல்முறையீடு செய்வதாக கூறினார்.
"கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க எப்போதும் துரிதமாக இருக்கும் ஜனாதிபதி, அது தனது சொந்த விவகாரம் என்று வரும்போது அது மாறும் என்று நம்புகிறார்" என்று ஃப்ளோரியின் வழக்கறிஞர் பெரஞ்சர் டூர்னே கூறினார்.
மேலும், தனது கட்சிக்காரர் "பொருத்தமற்ற, மோசமான மற்றும் முரட்டுத்தனமாக" இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார் , ஆனால் அது அவரை "எந்த விதத்திலும் குற்றவாளியாக" ஆக்கவில்லை என பெரஞ்சர் டூர்னே கூறினார்.