கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பிரான்ஸ்! இனி எல்லா இடங்களிலும் இது கட்டாயம்
டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு கொண்டுவந்துள்ளது.
பிரான்சில் உணவகம், கஃபே, ஷாப்பிங் சென்டர், மருத்துவமனை அல்லது நீண்ட தூர ரயிலில் நுழையும் எவரும் ஆகஸ்ட் முதல் சிறப்பு கோவிட் ஹெல்த் பாஸைக் காட்ட வேண்டும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
இந்த கோவிட் ஹெல்த் பாஸ், ஒரு நபருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அல்லது அவரது சமீபத்திய கோவிட் சோதனை முடிவுகளைக் காட்டுகிறது.
12 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் சினிமா, தியேட்டர், அருங்காட்சியகம், தீம் பார்க், கலாச்சார மையம் போன்ற வெகுஜன இடங்களில் நுழைவதற்கு இந்த கோவிட் ஹெல்த் பாஸ் கட்டாயம்.
பிரெஞ்சு மக்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை விரைவில் பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 21-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி கூறினார்.
சுகாதார மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு கட்டாய கோவிட்-19 தடுப்பூசிகளையும் மக்ரோன் அறிவித்தார். அந்த தொழிலாளர்கள் மீதான தடுப்பூசி சோதனைகள் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும், அதற்கு இணங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பிரான்ஸ் அதன் மக்கள்தொகையில் 40% பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. தடுப்பூசிகள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பரவலாகக் கிடைக்கின்றன.
பிரான்சில் புதிய பாதிப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 4,200-ஆக உயர்ந்துள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை - கடந்த 24 மணி நேரத்தில் நான்கு என்ற அளவில் குறைந்துள்ளது. பிரான்சில் கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 7,000 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.