உக்ரைன் போரால் தானிய உற்பத்தியை பெருக்க பிரான்ஸ் எடுக்கும் முக்கிய முடிவு!
விளைநில விதிகளை தளர்த்தி தானிய உற்பத்தியை பெருக்க பிரான்ஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரினால் உலக உணவுச் சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஐரோப்பாவில் அதிகமாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய உற்பத்தியாளரான பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது, ஐரோப்பிய ஒன்றிய பண்ணை கொள்கை விதிகளுக்கு விலக்குகளை பிரான்ஸ் பயன்படுத்த உள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு பயிர் சுழற்சி மற்றும் தரிசு நிலம் தொடர்பான விதிகளை பிரான்ஸ் தளர்த்தும் என்று பிரெஞ்சு விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் தானிய உற்பத்தியை அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூன், சூலை மாதங்களில் பதிவான மிக குறைந்த மழைப்பொழிவால் பிரான்சில் வறட்சி ஏற்பட்டதாகவும், இதனால் தலைநகர் பாரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து சில மாவட்டங்களும் விரைவில் வறண்ட மாவட்டங்களாக மாறும் அபாயம் உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(File/Representational)
இதுகுறித்து பேசிய பிரதமர் எலிசபெத் போர்னே, 'இந்த வறட்சி முன்னர் எப்போதும் இல்லாத அளவு ஆபத்தானதாக மாறியுள்ளது. இது அடுத்த 15 நாட்களுக்கு தொடரும். இன்னும் நிலமை மோசமடையும்.
இந்த வறட்சியை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்கவும், அங்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், செயற்கை நீரூற்றுகள் போன்றவற்றை அமைக்கும் திட்டங்களை செயற்படுத்தவும் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
PC: Ludovic Marin/Pool via REUTERS