பிரித்தானியாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க பிரான்ஸ் முடிவு
வரும் சனிக்கிழமை முதல், பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரும் அனைத்துப் பயணிகளும், பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ஆன்டிஜன் அல்லது பிசிஆர் வகை கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும்.
அத்துடன், பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரும் அனைத்துப் பயணிகளும், பிரான்சுக்குள் நுழைந்ததும், கட்டாயம் தங்களை ஏழு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த ஏழு நாட்களில், அவர்கள் பிரான்சுக்குள் நுழைந்து 48 மணி நேரத்திற்குப்பின் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவரும்பட்சத்தில், அவர்கள் தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கொரோனாவின் ஐந்தாவது அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் காரணமாக, ஆறாவது கொரோனா அலையும் விரைவில் உருவாகலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.
தற்போது, பிரான்சில் குறைந்தது 170 பேருக்காவது Omicron வகை கொரோனா தொற்று இருப்பதாக கருதப்படுகிறது.
பிரித்தானியாவிலோ, Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்கு அதிகரித்து வருவதால், அங்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .