ரஷ்ய எண்ணெய் கடத்தல் கப்பலின் இந்திய மாலுமியைக் கைது செய்த பிரான்ஸ்
பிரெஞ்சு கடற்படையால் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் மாலுமியை, அந்தக் கப்பல் போலியான கொடியின் கீழ் இயங்குகிறதா என்பது குறித்த விசாரணைகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
58 வயதான மாலுமி
Grinch என்ற பெயருடைய கப்பல் வியாழக்கிழமை மத்தியதரைக் கடலில் கைப்பற்றப்பட்டு, பின்னர் பிரெஞ்சு துறைமுக நகரத்திற்கு வெளியே நங்கூரமிடுவதற்காகத் திருப்பி விடப்பட்டது.

உக்ரைன் போர் தொடர்பிலான தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதி செய்ய உதவும் சட்டத்திற்கு புறம்பான கப்பல் வரிசையின் ஒரு பகுதியாக இருந்ததாக சந்தேகத்தின் பேரிலேயே பிரித்தானியாவின் உதவியுடன் பிரெஞ்சு கடற்படை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் தற்போது Grinch எண்ணெய் கப்பலின் 58 வயதான மாலுமியை விசாரணை தொடர்பில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியக் குடிமகனான அவர் ஆரம்பகட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்டுள்ளார் என அரசு தரப்பு சட்டத்தரணிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கப்பல் ஜனவரி மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் முர்மானஸ்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்றும், அது கொமோரோஸ் தீவின் கொடியின் கீழ் பயணித்தது என்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைவரும் இந்தியர்கள்
மேலும், கப்பலுக்கும் பயன்படுத்தியுள்ள கொடிக்குமான தொடர்பு மற்றும் ஆவணங்கள் ஆகியவையும் அதிகாரிகள் சரிபார்க்கும் வரையில், எஞ்சிய கப்பல் ஊழியர்களும் தடுத்து வைக்கப்படுவார்கள்.
Grinch எண்ணெய் கப்பலில் பணியாற்றிய அனைவரும் இந்தியர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது 19 தொகுப்புத் தடைகளை விதித்துள்ளது,

ஆனால் ரஷ்யா பெரும்பாலான நடவடிக்கைகளுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வழக்கமாக தள்ளுபடி விலையில் மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெயை தொடர்ந்து விற்று வருகிறது.
இதில் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி என்பது, இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான கப்பல்களில் முன்னெடுக்கப்படுகிறது.
அக்டோபர் மாதம், பிரான்ஸ் தனது மேற்கு கடற்கரைக்கு அப்பால், தடைசெய்யப்பட்ட மற்றொரு எண்ணெய் கப்பலான போராகாயை சிறைபிடித்து, சில நாட்களுக்குப் பிறகு அதை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |