பிரான்சில் 8 பேருக்கு Omicron தொற்று.., சுகாதார அமைச்சகம் தகவல்
பிரான்சில் 8 பேர் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் சுகாதார அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் Omicron வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என 8 பேரை கண்டறிந்ததாகக் கூறியது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து பிரான்சிற்கு வந்துள்ள அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் Omicron வகை வைரஸால் தான் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் பல நாட்கள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
போட்ஸ்வானாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வகை கொரோனா வைரஸ், தற்போது பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், அவுஸ்திரேலியா மற்றும் ஹொங்ஹொங் உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Photo: REUTERS
பிரான்ஸ் தற்போது பெருந்தொற்றின் ஐந்தாவது அலைக்கு மத்தியில் உள்ளது. அங்கு, நேற்று ஒரே நாளில் 31,600-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
புதிய மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் முன்னதாக பாரிஸில் உள்ள தடுப்பூசி மையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
Omicron வைரஸால் பாதிக்கப்படுபவர் யாராக இருப்பினும், அவர்கள் தடுப்பூசி போடப்பட்டாலும், தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். அந்த நபர்கள் "அதிக ஆபத்து" எனக் கருதப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
பிரான்ஸ் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் குறைந்தது டிசம்பர் 1-ஆம் தேதி வரை இடைநிறுத்தியுள்ளது மற்றும் அதன் அருகிலுள்ள வெளிநாட்டு பிரதேசங்களான லா ரீயூனியன் மற்றும் மயோட்டிலிருந்து வரும் மக்களுக்கான நெறிமுறைகளை முடுக்கிவிட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.