பிரான்ஸ் தேர்தல் கலவரங்கள்: தங்களை நோக்கி வேகமாக வந்த காரை நோக்கி பொலிசார் சுட்டதில் நேர்ந்த பயங்கரம்
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சோதனைச் சாவடி ஒன்றில் நிற்காமல் வேகமாக வந்த கார் ஒன்று பொலிசாரை நோக்கி முன்னேற, பொலிசார் அந்தக் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்து காரில் இருந்த இருவர் உயிரிழந்துள்ளார்கள், ஒருவர் காயமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், காயமடைந்தவர் ஒரு பெண் என்றும், அவர் அந்தக் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் தெரிந்தெடுக்கப்பட்டதற்கு பிரான்சில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி பேரணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், இந்த சம்பவம் அந்த எதிர்ப்பு பேரணிகளுடன் தொடர்புடையதா என்பது தெரியவில்லை.
இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.