பிரான்சின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டு! சிறப்பு நீதிமன்றம் விசாரணை
பிரான்சில் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாண்டது குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முறையாக விசாரணை தொடங்கியுள்ளது.
மே 2017-இல் பிரான்சின் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றவர் அக்னஸ் புசின் (58).
பிரான்சில் முதல் கோவிட் -19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில், பாரிஸ் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, கடந்த 2020-இல் பிப்ரவரி மாதம் அக்னஸ் புசின் (Agnès Buzyn) தனது பதவியை விட்டு வெளியேறினார்.
அப்போது அவர் பேசுகையில், கோவிட் தொற்று குறைந்த ஆபத்து என்று கூறினார். ஆனால், சில நாட்களுக்கு பிறகு அவர், கோவிட் பெருந்தொற்றை 'சுனாமி நெருங்குகிறது' என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பெருந்தொற்று குறித்து முன்பே அறிந்திருந்தும் அந்த சமயத்தில் பதவி பதவி விலகி, நிலைமையை முறையாக கையாளவில்லை என அக்னஸ் புசின் மீது சந்தேகம் எழுந்தது.
இதன் காரணமாக, கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில் "மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக" அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அரசாங்கத் தவறுகளைப் பார்க்கும் வழக்கறிஞர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவர் தரப்பு விளக்கத்தை முன்வைக்க நீதிமன்றத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புசின், உண்மையை வெளிப்படுத்த தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில் "உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு நம் நாட்டை தயார்படுத்த நாங்கள் நிறைய செய்தபோது, நான் நிச்சசயமாக அரசாங்கத்தின் செயல்களையோ அல்லது எனது செயல்களையோ மதிப்பிழக்க விடமாட்டேன்" என்று கூறினார்.
Photo: Lucas Barioulet/AFP
இந்த விசாரணை குறித்து அரசாங்கத் தவறுகளைப் பார்க்கும் பிரான்சின் சிறப்பு நீதிமன்றம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரான்சின் தற்போதைய சுகாதார அமைச்சர் ஒலிவியர் வரானையும் (Olivier Véran) வரவிருக்கும் வாரங்களில் அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வரவழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.