ஊழல் வழக்கு... பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய சிக்கல்
ஊழல் வழக்கொன்றில் சிக்கிய முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவருக்கு, அவரது வலது கையாக செயல்பட்ட ஒருவராலேயே புதிதாக சிக்கல் உருவாகியுள்ளது.
ஊழல் வழக்கு...
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.
அந்த வழக்கில், சார்க்கோஸி மீதான, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு உண்மை என முடிவு செய்த நீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், 100,000 யூரோக்கள் அபராதமும் விதித்தது.
முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய சிக்கல்
சார்க்கோஸி பிரான்ஸ் ஜனாதிபதியாவதற்கு பெரிதும் உதவியவர், அவரது வலது கை என அழைக்கப்பட்டவரும், அவரது அரசில் உள்துறை அமைச்சராக பணியாற்றியவருமான க்ளாட் (Claude Guéant, 81) என்பவர்.
ஆனால், சார்க்கோஸி மீதான வழக்கு விசாரணையின்போது, தன் உதவியாளரான க்ளாட், தனக்குத் தெரியாமல் பண ஆதாயத்துக்காக அந்த ஊழலில் ஈடுபட்டிருக்கலாம் என சார்க்கோஸி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தெரியவந்ததால் ஆத்திரமடைந்துள்ள க்ளாட், சார்க்கோஸிக்கு எதிராக திரும்பிவிட்டார்.
க்ளாட் தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியத்தில், தான் தன் தலைவரான சார்க்கோஸி சொன்னதை மட்டுமே செய்ததாகவும், தானாக எதையும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இருபதே நாட்களில் வீடு திரும்பிவிட்டார் சார்க்கோஸி.
ஆனால், மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டால், சார்க்கோஸி 10 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |