ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி 20 நாட்களில் விடுதலை?
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோஸி, வெறும் இருபதே நாட்களில் விடுதலை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை
2007ஆம் ஆண்டு முதல், 2012ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கோலஸ் சார்க்கோஸி.

2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.
சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என முடிவு செய்துள்ள நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 21ஆம் திகதி அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்படுவாரா?
சார்க்கோஸி சிறையிலடைக்கப்பட்டதுமே, அவரது சட்டத்தரணிகள் அவரை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
அத்துடன், சார்க்கோஸிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேல்முறையீடும் செய்துள்ளனர்.

இந்நிலையில், சார்க்கோஸியை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தை இன்று நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.
பிரான்ஸ் குற்றவியல் சட்டம் பிரிவு 144இன் படி, மேல்முறையீடு செய்துள்ள ஒரு நபர், தான் சாட்சிகளைக் குலைக்கமாட்டேன், வெளிநாட்டுக்கு தப்பியோடமாட்டேன் என சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
சிறையிலிருப்பதற்கு பதிலாக அவர் வெளியே பொலிஸ் கண்காணிப்பில் வாழ அனுமதிக்கப்படலாம்.
அவ்வகையில், இன்று சார்க்கோஸி சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |