கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடான பிரான்ஸ்... களமிறக்கப்பட்டுள்ள தீயணைப்புத்துறை
பிரான்சில் மூன்று வாரங்களில் பெய்யவேண்டிய மழை 12 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்ததால், வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நதிகள் நிரம்பி வழிகின்றன.
வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தீயணைப்புதுறை களமிறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரான்சின் பெரும்பகுதி, மற்றும் வட ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து, நதிகளும் நிரம்பி வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, வீடுகளிருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். ஸ்பெயினில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெப்பக் காற்று காரணமாக Pyrenees மலைப்பகுதியில் பனி உருகியதும் வெள்ளத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பிரச்சினை பல நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சைப் பொருத்தவரை ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும், வேறு எந்த விபத்துக்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்தும் தகவல் இல்லை என்றும், கடந்த சில மணி நேரங்களுக்குள் தீயணைப்பு வீரர்கள் 250 அழைப்புகள் வரை பெற்றதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பிரான்சையும் ஸ்பெயினையும் பிரிக்கும் Pyrenees பகுதியில் பனிப்பாறைச்சரிவு அபாயம் குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்சில், பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.