பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை
France Govt Announces Paris Nighttime Curfews: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு
பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் சிறந்த கல்வி சூழ்நிலைகள் தொடர்பாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டங்கள் பல்வேறு இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளது. சனிக்கிழமையன்று, அரை மில்லியனுக்கும் அதிகமானோர் பிரான்சின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அரசு கட்டிடங்கள், பொலிஸ் நிலையங்கள் உட்பட பல இடங்கள் மீது தாக்குதல், தீவைப்பு, சூறையாடல் என வன்முறை அதிகரித்தது.
இதனை தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில் பாரிஸ் நகரின் முக்கிய சில இடங்கள் மற்றும் வடக்கு பிரான்சின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரின் ரிபப்ளிக் சதுக்கம் மற்றும் லெஸ் ஹால்ஸ் சுற்றியுள்ள வீதிகள் இந்த உத்தரவின் கீழ் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு இரவு 11 முதல் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை கட்டுப்படுத்தும் முந்தைய ஊரடங்கு உத்தரவு போல் இல்லாமல், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் வயது வித்தியாசமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொது அமைதியை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய உத்தரவானது பிறப்பிக்கபட்டுள்ளது.
வடக்கு பிரான்சின் லில், டூவே, டெனைன் மற்றும் வாட்டினிஸ் ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.