நாடு முழுவதும் வேலை நிறுத்தம்... பிரான்சில் மேக்ரானுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு
பிரான்சில் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய, நாட்டு மக்களில் மூன்றில் இரண்டுபேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவி விலகவேண்டும் எனவும் குரல்கள் வலுவாக ஒலிக்கத் துவங்கியுள்ளன.
நாடு முழுவதும் வேலை நிறுத்தம்...
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவருகிறார் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou).
அரசின் கடனைக் குறைக்கும் வகையில், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக, இரண்டு அரசு விடுமுறைகளை குறைக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்தார் பேய்ரூ. ஆனால், அது பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சில அமைப்புகள் பட்ஜெட் தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 10ஆம் திகதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அத்துடன், செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி, நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய, நாட்டு மக்களில் மூன்றில் இரண்டுபேர் ஆதரவு தெரிவித்துள்ளது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மேக்ரானுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு
செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய, மக்கள் திட்டமிட்டுவரும் நிலையில், செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியுள்ளார் பிரதமர் பேய்ரூ.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேய்ரூவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அப்படி வாக்கெடுப்பில் பேய்ரூ தோற்கடிக்கக்கப்பட்டால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அடுத்த பிரதமராக மற்றொருவரை நியமிப்பார்.
அதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை, இதே கொள்கைகள்தான் மீண்டும் தொடரும் என்கிறார்கள் எதிர் தரப்பினர்.
ஆக, புதிய பிரதமரை நியமிப்பதில் எந்த பலனும் இல்லை. எனவே, ஜனாதிபதி மேக்ரான் பதவி விலகவேண்டும் என்கிறார்கள் வலதுசாரி எதிர் தரப்பினர்.
ஆக மொத்தத்தில், ஏதாவது நல்ல மாற்றம் ஏற்பட்டாலொழிய, அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் பிரான்சில் பெரும் குழப்பங்கள் ஏற்படப்போவதில் எவ்வித சந்தேகமுமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |