12,000 வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் பிரான்ஸ்: எதற்காக தெரியுமா?
பிரான்ஸ் நாடு, 12,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றின் கீழ் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கியுள்ளது.
நாடு கடுமையான கொரோனா காலகட்டத்தை சந்தித்த நேரத்தில், களத்தில் முன்னணியில் நின்று கொரோனாவை எதிர்த்துப் போராடியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்த தகவலை நேற்று வெளியிட்ட குடியுரிமை அமைச்சரான Marlene Schiappa, சிறப்புத் திட்டம் ஒன்றின் கீழ் விண்ணப்பித்த 16,000 பேரில் 12,012 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வழக்கமாக, ஒருவர் பிரான்சில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பிறகே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று விதி இருக்கும் நிலையில், அந்த சிறப்புத் திட்டத்தின்படி, அத்தியாவசிய பணியில் இருப்போர் இரண்டு ஆண்டுகள் பிரான்சில் வாழ்ந்த நிலையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ள முன் களப்பணியாளர்களில் சுகாதாரப்பணியாளர்கள் மட்டுமின்றி, செக்யூரிட்டி கார்டுகளாக பணிபுரிவோர் முதலானோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.