பிரான்சில் அடுத்த கொரோனா அலை எப்போது தாக்கும்? எச்சரிக்கும் சுகாதார அமைச்சர்
பிரான்சில் சுகாதார அமைச்சர் நாட்டின் மூன்றாவது கொரோனா அலை குறித்து மக்களை எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் பின் தடுப்பூசி கொண்டு வரப்பட்ட பின்பு, அங்கு கொரோனா வைரஸ் பரவல் மற்றும் இறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன.
ஆனால், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கொரோனா, வைரஸ் இப்போது உலகில் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. அது பிரான்சிலும் உள்ளதால், இந்த வகை வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, சமீபநாட்களாக அதிகரித்து வருகிறது.
இது குறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் கூறுகையில், கடந்த சில நாட்களாக புதிய வகை டெல்டா வைரஸ் அச்சுறுத்தி வருவதால்ல், வரும் ஜுலை இறுதிக்குள் கொரோனாவின் மூன்றாவது அலை வர வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அவர் சமூக இடைவெளி, தடுப்பூசி, கொரோனப் பரிசோதனை, தனிமைப்படுத்தல் ஆகியவற்றால் மட்டுமே இந்த கொரோனாவின் மூன்றாவது அலையை தவிர்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பிரான்சில் சமீபத்தில் தான் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதால், மக்கள் எந்த சமூக இடைவெளிகளும் இன்றி, கூட்டம் கூட்டமாக உணவகங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கூடுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.