பிரான்சில் கொசுக்களைக் காணவில்லையாம்: என்ன காரணம்?
வழக்கமாக ஜன்னலை மூடி வைத்திருந்தால் கூட, வாய்ப்புக் கிடைக்கும்போது வீட்டுக்குள் நுழைந்து கொசுக்கள் தொல்லை கொடுக்கும் நிலையில், இப்போது கதவு திறந்திருந்தால் கூட பெரிய அளவில் கொசுத் தொல்லை இல்லை என்கிறார்கள் பிரான்ஸ் மக்கள்.
என்ன காரணம்?
பொதுவாக, கோடையில் கொசுக்கள் வேகமாக பரவுவது வழக்கம். வெப்பத்தில் கொசுக்களின் முட்டைகள் வேகமாக பொரிக்கும், லார்வாக்கள் வேகமாக வளரும் என்பது உண்மைதான்.
அதே நேரத்தில், வெப்பம் மிக அதிகமாக இருக்குமானால், அது எதிர்மறையான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் செல்லும்போது, தண்ணீர் இழப்பு முதலான காரணங்களால் கொசுக்களின் செயல் திறன் குறையும், அவை விரைவாக மடியவும் கூடும்.
ஆக, வெப்பம் அதிகமாக இருக்கும்போது, கொசுக்களும் குளிர்ச்சியான, நிழல் இருக்கும் இடங்களில் பதுங்கிக்கொள்கின்றனவாம்.
இன்னொரு விடயம், கொசுக்கள் முட்டையிட தேங்கி நிற்கும் தண்ணீர் தேவை. அதிக வெப்பம் நிலவும் காலங்களில் தண்ணீர் வற்றிப்போவதால், கொசுக்களால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் போவதும் கொசுக்கள் எண்ணிக்கை குறையக் காரணம்.
விடயம் என்னவென்றால், இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம். மழை வந்தால் போதும், தோட்டங்கள், அல்லது வீட்டுக்கு வெளியே வைத்துள்ள தேவையற்ற பாத்திரங்களில் தேங்கும் தண்ணீர் கூட கொசுக்கள் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய போதுமானதாக அமைந்துவிடும்.
குறிப்பாக டைகர் கொசுக்கள் என அழைக்கப்படும் கொசுக்களின் முட்டைகள் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டவை என்பதால், அவை மழைக்காக காத்திருக்கும்.
ஆக, மழை துவங்கிவிட்டதா, நாம் கவனமாக இருந்தாகவேண்டும். ஏன்னெறால், டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் சிகா வைரஸ்களை பரப்பக்கூடிய டைகர் கொசுக்களின் முட்டைகள் பொரிந்து வேகமாக வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |