பிரித்தானியா பயணிகளுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து பிரான்ஸ் சூசகமாக வெளியிட்ட முக்கிய தகவல்
இந்திய மாறுபாட்டின் பரவல் குறித்த அச்சங்களுக்கு மத்தியில், பிரித்தானியா பயணிகள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கக்கூடும் என்று பிரான்ஸ் சூசகமாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியா பயணிகளுக்கு சற்று கடுமையான சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை பிரான்ஸ் அரசாங்கம் நிராகரிக்கவில்லை என நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian கூறினார்.
இந்திய மாறுபாடு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். பிரித்தானியா அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இந்திய மாறுபாடு விஷயத்தில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம் என அவர் கூறினார்.
பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தை வைரஸ் மாறுபாடு பகுதியாக ஜேர்மனி பொது சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து பிரான்ஸ் இவ்வாறு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திலிருந்து ஜேர்மனிக்குச் செல்லும் மக்கள், ஜேர்மன் குடிமகனாகவோ அல்லது வசிப்பவராகவோ இருந்தால் மட்டுமே அந்நாட்டிற்குள் நுழைய முடியும்.
மற்றவர்கள் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அதே போல் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இரண்டும் பிரித்தானியா அரசாங்கத்தின் மஞ்சள் (amber) பட்டியலில் உள்ளன.
அதாவது இந்த இரண்டு நாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள் 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் புறப்படுவதற்கு முன்பும் மற்றும் வருகைக்கு பின்பும் என இரண்டு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.