பிரான்சின் பெயர் காரணம் முதல்... அரசியல், சமூகம் தொடங்கி விரிவான வரலாறு
கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐரோப்பாவிலும் உலகிலும், பண்பாடு, பொருளாதாரம், இராணுவம், அரசியல் என வலுவான செல்வாக்குக் கொண்ட ஒரு நாடாகப் பிரான்ஸ் விளங்கி வருகிறது.
சமூகவாதக் குடியரசு
17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் வட அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா என பெரும் பகுதிகளைப் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு, மேற்கு, நடுப் பகுதிகளையும், தென்கிழக்கு ஆசியாவையும், பல கரிபிய, பசிபிக் தீவுகளையும் உள்ளடக்கிய ஒரு பேரரசைப் பிரான்ஸ் கட்டியெழுப்பியது.
அக்காலத்தில் இதுவே உலகின் இரண்டாவது பெரிய காலனித்துவப் பேரரசாக விளங்கியது. பிரான்சின் அரசியலமைப்பு, அந்த நாட்டைப் பிரிக்கமுடியாத, மதச் சார்பற்ற, மக்களாட்சிச் சமூகவாதக் குடியரசு என்கிறது.
உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட பிரான்ஸ், உயர்ந்த பொதுக் கல்வியறிவு மட்டத்தையும் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பட்டியலின்படி, உலகின் மிகச் சிறந்த பொதுச் சுகாதார வசதிகளை வழங்கும் நாடாகப் பிரான்ஸ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றம், G8 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் பிரான்ஸ் உறுப்பினராக உள்ளது.
இலத்தீன் சொல்லில் இருந்து
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் பிரான்சும் ஒன்று. பிரான்ஸ் என்பது, "பிராங்க் மக்களின் நாடு" என்னும் பொருள்தரும் பிரான்சியா (Francia) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
மேற்கு ரோம் இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பிரதேசங்களில் குடியேறிய ஜேர்மனிய பிராங்க் இன மக்கள் தொடர்பில் பிரான்ஸ் பெயர் ஏற்பட்டது. பண்டைய ஜேர்மன் மொழியில் பிராங்க் என்பது அடிமைகள் அல்லாத விடுதலை கொண்ட மக்களைக் குறித்தது என்றும், இதுவே பிராங்குகளுக்கு அப்பெயர் ஏற்படக் காரணமாகியது என்றும் கூறுகின்றனர்.
உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடாக பிரான்ஸ் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 82 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஐரோப்பாவில் 547,030 ச. கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட பிரான்சின் பெருநிலப்பரப்பு பல்வேறு புவியியல் அமைப்புகளை கொண்டதாகும்.
வடக்கே கரையோர சமவெளிகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவின் மிக உயரமான மலையான பிளாங்க் மலை (4810 மீட்டர்) பிரெஞ்சு ஆல்ப்சில் அமைந்துள்ளது. ஆல்ப்ஸ் பகுதியிலும் பிற மலைப் பகுதிகளிலும் பெரும்பாலும் ஆல்ப்சுக் காலநிலை நிலவுகின்றது.
தனித்துவமான கலவை
இப்பகுதிகளில் ஆண்டுக்கு 150 நாட்களுக்கும் மேல் வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே காணப்படுவதுடன், ஆறு மாதங்கள் வரை இப்பகுதிகளைப் பனிமூடி இருக்கும். பிரான்சின் நிலப்பரப்பில் 28 சதவிகிதம் வனப்பகுதியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக வனப்பகுதிகளைக் கொண்ட நாடுகளில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரான்சின் வனப்பகுதிகளில் 140க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான மர வகைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
பிரான்சில் 9 தேசியப் பூங்காக்களும், 46 இயற்கைப் பூங்காக்களும் அமைந்துள்ளன. பிரான்ஸ் அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற அமைப்புகளின் தனித்துவமான கலவையாகும். இது வளமான அரசியல் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
ஏறத்தாழ 68 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரான்ஸில், வழக்கமான பிரெஞ்சு குடிமகன் இன்று நகர்ப்புறத்தில் வாழ்ந்தாலும், பிரான்சின் விவசாயப் பகுதிகள் வலுவாக உள்ளன. பாரிஸைச் சுற்றியுள்ள வடகிழக்கு நாற்புறம் மிகவும் நகரமயமாக்கப்பட்டது மற்றும் தொழில்மயமாக்கப்பட்டது, அதே நேரத்தில் மேற்கு மற்றும் தெற்கு கிராமப்புற மற்றும் விவசாயமயமாக உள்ளது.
பிரான்ஸ் அதன் ஒயின், உற்பத்தி, கோழி, தானியங்கள் மற்றும் வாத்துக்களுக்கு பிரபலமானது. பிரான்ஸ் அட்லாண்டிக் பெருங்கடல், ஆங்கில கால்வாய் மற்றும் மத்தியதரைக் கடல் ஆகியவற்றில் பரந்த கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
எனவே மீன்பிடித்தல் மற்றும் கப்பல் வணிகம் ஆகியவை பிரெஞ்சு பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. பிரான்ஸ் அரசியலில் இடது மற்றும் வலது என்ற பிரிவினை பிரெஞ்சுப் புரட்சி வரை சென்று இன்றும் ஒரு முக்கிய சக்தியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |