ரஷ்யா தொடர்புடைய எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றிய பிரான்ஸ் கடற்படை
இந்த வாரத் தொடக்கத்தில் சிசிலி கடற்பகுதியில் ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல் ஒன்றை பிரான்ஸ் தடுத்து நிறுத்தியதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
கடல் சட்டத்தை மீறி
ஜனாதிபதி மேக்ரான் இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று, கடல் சட்டத்தை மீறி சிசிலி கடற்கரைக்கு அப்பால் சென்று கொண்டிருந்த 'டெலிவர்' (Deliver) என்ற எண்ணெய் கப்பலை பிரெஞ்சு கடற்படையினர் முற்றுகையிட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேமரூனியக் கொடியுடன் ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் நகரிலிருந்து பயணித்து வந்த அந்தக் கப்பல், மேலதிக சோதனைகளுக்காக நங்கூரமிடும் இடத்திற்கு பிரெஞ்சு கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட மேற்கத்தியத் தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும், ரஷ்யா மறைமுக சரக்கு கப்பல் குழுவைச் சேர்ந்தது என்று மேக்ரான் கூறியுள்ளார்.
ரஷ்யா பயன்படுத்தும் இப்படியான கப்பல்கள், தொடர்ந்து தங்கள் கொடி அடையாளத்தை மாற்றுவதுடன் செல்லுபடியாகாத ஆவணங்களையும் பயன்படுத்தி வருகிறது.
இப்படியானக் கப்பல்களை தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதையும் ஆதரிக்க முடியாது என மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சுமார் 600 கப்பல்கள்
செப்டம்பர் மாதத்திலிருந்து, ரஷ்யாவிற்குச் சொந்தமானவை என்று கருதப்படும் மேலும் நான்கு கப்பல்களை பிரான்ஸ் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் பிற கூட்டாளிகளின் உதவியுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மே மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையும் இதில் அடங்கும்.

2022-இல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய படையெடுப்பின் காரணமாக, அந்நாட்டின் இப்படியான சட்டத்திற்கு புறம்பான நூற்றுக்கணக்கான கப்பல்கள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்படும் கப்பல்களின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 600 கப்பல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |