மோசமடையும் சூழ்நிலை... விமான போக்குவரத்தை ரத்து செய்யும் பிரான்ஸ்
பிரேசில் மற்றும் பிரான்ஸ் இடையிலான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படும் என்று பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நிலைமை மோசமடைந்து வருவது கண்டறியப்பட்டதை தொடர்ந்தே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் பலரிடம் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று, பிரான்சில் 6 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரான் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பிரேசில் நாட்டுடனான அனைத்து விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
உருமாற்றம் கண்ட கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரேசிலில் இருந்து பிரான்சுக்கு வரும் விமானங்கள் மற்றும் பிரான்சில் இருந்து பிரேசிலுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.