லண்டனில் கவனமாக பயணிக்கவும்... பிரான்ஸ் முதலான நாடுகள் பயண எச்சரிக்கை
பிரித்தானிய பயணம் தொடர்பில் பிரான்ஸ் முதலான பல நாடுகள் அசாதாரண பயண எச்சரிக்கை விடுத்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
பிரித்தானிய பயணம் தொடர்பில் பயண எச்சரிக்கை
பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், மெக்சிகோ முதலான நாடுகள், பிரித்தானிய பயணம் தொடர்பில் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக, லண்டனுக்குச் செல்லும்போது விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், அங்கு மொபைல் திருட்டு அதிகம் என்றும் எச்சரிக்கின்றன இந்த நாடுகள்.
லண்டன் பொலிசாரும், லண்டனில் ஆறு நிமிடங்களுக்கு ஒரு மொபைல் போன் திருடப்படுவதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம், லண்டனில் சமீப காலமாக வன்முறையும் கத்திக்குத்து தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது.
இரவில் பொது இடங்களுக்குச் செல்லும்போது மக்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்லவேண்டாம் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம் தன் குடிமக்களை எச்சரிக்கிறது.
அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் பிக்பாக்கெட் போன்ற சிறு குற்றச்செயல்கள் அதிகம் என்றும், ஆகவே, பிரித்தானியாவுக்குப் பயணிக்கும் அவுஸ்திரேலியர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்றும் எச்சரிக்கிறது.
தனது பயண எச்சரிக்கை மட்டத்தை உயர்த்தியும் உள்ளது அவுஸ்திரேலியா.
இந்நிலையில், கடந்த ஆண்டில் மட்டும், திருட்டு, கொள்ளை, குற்றங்களால் ஏற்படும் சேதம், மோசடி, கணினிகள் தவறான பயன்பாடு மற்றும் வன்முறை ஆகிய 9.6 மில்லியன் குற்றச் சம்பவங்கள் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |