சிரியாவின் அசாதுக்கு எதிராக புதிய கைதாணை பிறப்பித்த பிரான்ஸ்
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்கு எதிராக இரண்டு பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைதாணை பிறப்பித்துள்ளனர்.
தலைமைத் தளபதி
சிரியாவின் அசாதுக்கு எதிராக பிரான்சின் நீதித்துறை அதிகாரிகளின் இரண்டாவது நடவடிக்கை இதுவென்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இஸ்லாமிய போராளிகளின் மின்னல் தாக்குதல் நடவடிக்கையை அடுத்து அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு சிரிய நகரமான தெராவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி என்ற முறையில் அவர் பொறுப்பேற்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட கைதாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட அந்த நபர் 59 வயதான பிரெஞ்சு ஆசிரியர் என்றும், அவர் இரட்டைக் குடியுரிமை கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில், இந்தத் தாக்குதலுக்கு அசாத் உத்தரவிட்டுள்ளதாகவே பிரெஞ்சு நீதித்துறை கருதுகிறது. மேலும், 2018ல் தொடங்கிய விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக ஆறு மூத்த சிரிய இராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பிரெஞ்சு நீதித்துறையால் கைதாணைக்கு இலக்காகியுள்ளனர்.
இரசாயனத் தாக்குதல்கள்
இந்த வழக்கானது, நானும் எனது குடும்பத்தினரும் தொடக்கத்திலிருந்தே நம்பிய நீதிக்கான நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகும் என பாதிக்கப்பட்டவரின் மகன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரிய விசாரணை நடைபெறும் என்றும், குற்றவாளிகள் எங்கிருந்தாலும் கைது செய்யப்பட்டு நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2013ல் இரசாயனத் தாக்குதல்கள் தொடர்பாக அசாதுக்கு எதிராக பிரெஞ்சு அதிகாரிகள் நவம்பர் 2023 இல் முதல் கைதாணை பிறப்பித்துள்ளனர். குறித்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவே அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக ஒரு நாட்டின் தலைவராக அசாதுக்கு விதிவிலக்கு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு அரசு தரப்பு சட்டத்தரணிகள் கைதாணைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.
ஆனால் தற்போது அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டு, விதிவிலக்கு கோர முடியாத நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |