பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியை ஆண் என கேலி செய்த விவகாரம்: 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியான பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர் என விமர்சித்து அவரை வம்புக்கிழுத்துவந்த வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என பாரீஸ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து பரவிவரும் வதந்திகள்
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் மனைவி குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுவதுண்டு. அவற்றில், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் ஆணாகப் பிறந்தவர் என கூறும் வதந்தியும் ஒன்று.

- Reuters
அவ்வகையில், ஜீன் மைக்கேல் (Jean-Michel Trogneux) என்னும் ஆண், அறுவை சிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்டு, தன் பெயரையும் பிரிஜிட் என மாற்றிக்கொண்டு மேக்ரானை திருமணம் செய்துகொண்டதாக சில யூடியூபர்கள் வதந்தி பரப்பிவருகிறார்கள்.
உண்மையில், ஜீன் மைக்கேல் என்பவர் பிரிஜிட்டின் சகோதரர் ஆவார்.
10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
இப்படி தொடர்ந்து சிலர் வதந்தி பரப்பி வரும் நிலையில், அது பிரிஜிட் மற்றும் மேக்ரானை மட்டுமின்றி, அவரது பேரப்பிள்ளைகள் உட்பட குடும்பத்தினர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
ஆகவே, வதந்தி பரப்புவோரை நீதிமன்றத்துக்கு இழுத்தார் பிரிஜிட்.
இந்நிலையில், பாரீஸ் நீதிமன்றம் ஒன்று, பிரிஜிட்டுக்கு எதிரான சைபர் வம்புக்கிழுக்கும் வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்துள்ளது.

Credits - (Guillaume BAPTISTE / AFP, Aurélien Morissard/AP)
அவர்களில், Zoe Sagan என சமூக ஊடகங்களில் அறியப்படும் Aurelien Poirson-Atlan (41) மற்றும் Bertrand Scholler(56) ஆகியோர் குறிப்பிடத்தக்க பிரபலங்கள் ஆவர்.
அந்த 10 பேரில் 8 பேருக்கு நான்கு முதல் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே சிறை செல்வார்கள்.
அத்துடன், வழக்கு விசாரணைக்கு வராத ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், மற்றொருவருக்கு இணைய வெறுப்பு பேச்சுக்கு எதிரான படிப்பு ஒன்றை படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரிஜிட் ஆணாகப் பிறந்தவர் என வதந்தி பரப்பிவரும் அமெரிக்க சமூக ஊடக பிரபலமான கேண்டேஸ் ஓவன்ஸ் என்னும் பெண் மீது மேக்ரான் தம்பதியர் தொடர்ந்துள்ள வழக்கு ஒன்றும் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |