குளியல் உடையில் காட்சிப்படுத்தப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி புகைப்படம்: மனைவியுடன் சேர்ந்து புகார் அளித்த மக்ரோன்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), தமது தனிப்பட்ட புகைப்படத்தைக் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தது குறித்துப் புகார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவருடன் சேர்ந்து அவரது மனைவி பிரிஜிட் மக்ரோனும் (Brigitte Macron) சட்டப்படி புகார் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான 'எலிசி' அரண்மனைக்கு அருகில் உள்ள கலைக்காட்சியகத்தில் "பிரஞ்சு அதிபர்களும் அவர்களது விடுமுறை இடங்களும்" (Presidents of the Republic on their holiday locations) என்ற தலைப்பில் புகைப்படத்தொகுப்பு காட்சிக்கு வைக்கப்பட்டது.
அந்த கண்காட்சியில், ஜனாதிபதி மக்ரோன் குளியல் உடையில் Jet-Ski எனப்படும் விரைவுப் படகோட்டம் செய்வதைக் காட்டும் புகைப்படம் அதில் இடம்பெற்றது.
இந்நிலையில், தமது தனியுரிமையைப் பொருட்படுத்தாமல் அவ்வாறு படமெடுத்துக் காட்சிக்கு வைத்ததாகப் படம் பிடித்தவர் மீது மக்ரோன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து புகார் செய்துள்ளனர்.