விளையாட்டு வீரர்களும் விதிவிலக்கல்ல... பிரான்ஸ் கடும்போக்கு நடவடிக்கை
பிரான்சில் இனி தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய கொரோனா விதிகளின் அடிப்படையில், பிரான்சில் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் அனைவரும் முழுமையாகவோ அல்லது இரு டோஸ் தடுப்பூசியையோ போட்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், தனிப்பட்ட காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தொழில்முறை விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே தெரியவந்துள்ளது.
மார்ச் 19ம் திகதி ஆறு நாடுகளுக்கான இறுதிச் சுற்று விளையாட்டில் பிரான்ஸ் அணியுடன் இங்கிலாந்து மோத உள்ளது. இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இங்கிலாந்து வீரர்கள் பாரிஸ் நகரில் முன்னெடுக்கப்படும் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும்.
சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் Chelsea அணி Lille அணியை எதிர்கொள்ள உள்ளது. மார்ச் 16ம் திகதி நடக்கவிருக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியமானதாகவே கருதப்படுகிறது.
தற்போதைய சூழலில் பிரான்சின் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் தங்களின் கொரோனா கடவுச்சீட்டை சமர்ப்பித்தால் மட்டுமே விளையாட்டில் பங்கேற்க முடியும் அல்லது விளையாட்டு அரங்கத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.