பிரான்சில் வரும் 19-ஆம் திகதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாற்றம்! வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் சிறிய உணவங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் கட்டுப்பாடு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் இன்றளவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பரவல் ஓரளவிற்கு குறைந்துள்ளதால், சில கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வரும் மே 19-ஆம் திகதி முதல் சிறிய உணவகங்களில், வெளிப்புற மேஜைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், நீக்கப்பட்டு முழுமையாக மேஜைகளை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒவ்வொரு மேஜைகளுக்கும் இடையிலும் கட்டாயமான பாதுகாப்பு இடைவெளிகள் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் 20 சதவீத மாணவர்கள் மட்டும் பல்கலைக்கழங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 19-ஆம் திகதி முதல் அது 50 சதவீதமாக மாற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர், Frédérique Vidal தெரிவித்துள்ளார்.
குறித்த கல்வியாண்டில், விடுபட்ட பாடங்களை படிக்க 50 சதவீத மாணவர்களின் வருகை வாய்ப்பளிக்கும் எனவும் இதனால் ஒவ்வொரு மாணவருக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பல்கலைக்கழகம் வரும் அனுமதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முதல், கடந்த ஜனவரியிலிருந்து 20 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒவ்வொரு மாணவர்களிற்கும் அனுமதி கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.