உக்ரைன் விவகாரம்... கனடா உட்பட பல ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை: பிரான்ஸ் தீவிரம்
கனடா உட்பட வேறு பல ஐரோப்பிய நாடுகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
வேறு ஐரோப்பிய நாடுகள்
உக்ரைன் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தனியாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கும் நிலையில், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் நகரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
இதன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை முன்னெடுக்கப்பட இருப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதில் நேட்டோ உறுப்பு நாடான கனடா மற்றும் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாத வேறு ஐரோப்பிய நாடுகளையும் உட்படுத்த பிரான்ஸ் திட்டமிட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் நார்வே, கனடா, லிதுவேனியா, எஸ்டோனியா, லாட்வியா, செக் குடியரசு, கிரீஸ், பின்லாந்து, ருமேனியா, சுவீடன் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பயணப்பட முடியாத தலைவர்கள் காணொளி ஊடாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திங்களன்று உக்ரைன் விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடனும், நேட்டோ கூட்டணி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகளுடனும் அவசரக் கூட்டத்தை நடத்தினார்.
உச்சிமாநாடு அல்ல
அதில், உக்ரைனுக்கான சாத்தியமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் எவ்வாறு இருக்கும், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க ஐரோப்பா எவ்வாறு வேகமாக நகர வேண்டும் என்பதை மதிப்பிடுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க நிர்வாகம் தூதரக உறவுகளை விரைவுபடுத்தும்போது எவ்வாறு விரைவாக நகர்வது உள்ளிட்டவையும் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில நாடுகள் இந்தச் சந்திப்பு தெரிவு செய்யப்பட்ட தலைவர்களுடன் மட்டுமே என்றும், முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு அல்ல என்றும் அதிருப்தி தெரிவித்ததாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையிலேயே தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |