கொலை வழக்கில் சிக்கிய இரட்டையர்கள்: பொலிசாருக்கு உருவாகியுள்ள குழப்பம்
பிரான்சில் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் இரட்டையர்களான சகோதரர்கள் சிக்கியுள்ள நிலையில், உண்மையான குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
கொலை வழக்கில் சிக்கிய இரட்டையர்கள்
பிரான்சில் 2020ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கொன்றில் ஐந்து பேர் சிக்கினார்கள். அவர்களில், 33 வயதுடைய இரட்டையர்களான சகோதரர்களும் அடக்கம்.
இந்நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் சகோதரர்களில் ஒருவருடைய DNA உள்ளது.

ஆனால், அது யாருடைய DNA என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை!
அதாவது, ஒரே உருவம் கொண்ட அந்த இரட்டையர்கள் ஒரே கருமுட்டையிலிருந்து உருவானதால், அவர்கள் இருவருடைய DNAவும் ஒரே மாதிரியாக உள்ளது.
ஏற்கனவே தங்கள் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் அந்த சகோதரர்கள். தங்கள் உடை, மொபைல்கள் மற்றும் அடையாள அட்டைகளைக் கூட அவர்கள் வேண்டுமென்றே மாற்றி மாற்றி பயன்படுத்துவதுண்டாம்.
ஆக, கொலைக்குற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருக்கும் DNA யாருடையது என்பதைக் கண்டுபிடிக்க தடயவியல் நிபுணர்களால் இயலவில்லை.
ஆகவே, அவர்கள் தொடர்புடைய மொபைல் பயன்பாடு, CCTV கமெரா காட்சிகள், தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பது, அவர்கள் சம்பவம் நடக்கும்போது எங்கிருந்தார்கள், எங்கெங்கு சென்றார்கள் என்பது போன்ற தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்த வழக்கில் இம்மாத இறுதியில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |