உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும்: பிரான்சிலிருந்து உரக்க ஒலிக்கும் குரல்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, இப்போது பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற குரல் பிரான்சிலிருந்தும் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது.
குறிப்பாக கொரோனா பரவலைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அதைக் கையாண்ட விதம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், தற்போது பிரான்ஸ் நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிலையில், அதன் பெரும்பான்மை தடுப்பு மருந்து பிரித்தானியாவுக்கு செல்வதால் பிரான்ஸ் மக்களில் ஒரு கூட்டத்தினர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அதாவது, Valneva என்ற கொரோனா தடுப்பு மருந்து நிறுவனத்துடன் பிரித்தானியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 190 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி பிரித்தானியாவுக்கு கிடைக்க உள்ளது. அதில் 60 மில்லியன் டோஸ் இப்போதும், 100 மில்லியன் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் பிறகு மீதமுள்ளவை அதற்குப் பிறகும் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் Valneva நிறுவனத்துக்கும் இடையில் முறைப்படியான ஒப்பந்தம் செய்யப்படாததால், அந்நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்து பிரான்சுக்கு கிடைக்கப்போவதில்லை. அதே நேரத்தில், பிரித்தானியாவோ 2023 முதல் 2025 வரை தொடர்ந்து கிட்டத்தட்ட 1.2 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடுப்பூசியை வாங்க இருக்கிறது. அத்துடன், Valneva நிறுவனம் ஸ்காட்லாந்திலேயே தடுப்பு மருந்தை தயாரிக்க இருக்கிறது.
ஆக, தங்கள் நாட்டு நிறுவன தயாரிப்பான தடுப்பூசி தங்களுக்கே கிடைக்காத பட்சத்தில், பிரித்தானியா மட்டும் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தடுப்பு மருந்தை வாங்க உள்ளதால் பிரான்ஸ் நாட்டவர்கள், குறிப்பாக ஃப்ரெக்சிட் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளார்கள்.
அவர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி மீதும் ஐரோப்பிய ஒன்றியம் மீது கடும் கோபமடைந்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் தொகை வழங்கும் இரண்டாவது நாடாக பிரான்ஸ் இருக்கும் நிலையிலும், அது பிரான்சை பயன்படுத்திக்கொள்வதாக அவர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அதைத் தொடர்ந்தே, தற்போது, உடனடியான பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேரவேண்டும் என்ற குரல் பிரான்சிலிருந்து ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.