பிரான்ஸ் தலைநகரில் 3-ல் ஒருவருக்கு ஒமைக்ரான்! பேரழிவுக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மூன்று பேரில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அரச ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் ஐந்தாம் அலை உச்சத்தில் பிரான்ஸ் உள்ளது. இதற்கிடையில் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு மிக தீவிரமாக பரவி வருவதால், இதைக் கட்டுப்படுத்துவதுவதற்கு மேக்ரான் தலைமையிலான அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் பாரிசில் நடத்தப்பட்டு வரும் சோதனையில், மூன்றில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச ஊடக பேச்சாளர் Gabriel Attal கூறியுள்ளார்.
நேற்று(21.12.2021) சுகாதார நிலமைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், பார்சில் கண்டறியப்படும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவருக்கு ஒமைக்ரான் மாறுபாடு உள்ளது.
அதே போன்று, நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கொரோனா சோதனையில், பாதிக்கப்பட்டோரில் 20 சதவீதமானோருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
புள்ளி விபரங்கள் அனைத்தையும் பார்க்கும் போது, கவலையளிக்கும் வகையில் உள்ளது, நாம் மிகவும் பேரழிவுக்குள் நுழைந்துள்ளோம் என்று எச்சரித்தார்.