சினிமா பாணியில் பிரான்சிலிருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷம்: எங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
சினிமா பாணியில் பிரான்ஸ் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து திருடப்பட்ட விலையுயர்ந்த ஓவியம் ஒன்று, உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சினிமா பாணியில் திருட்டு
தென்கிழக்கு பிரான்சிலிருக்கும் நான்சி நகரிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றின் காவலாளிகள், 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய ஓவியம் ஒன்று காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அந்த ஓவியத்தின் சட்டம் (frame) மட்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருக்க, ஓவியத்தைக் காணவில்லை. இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
உக்ரைன் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியம்
இந்த சம்பவம் நடந்து ஓராண்டுக்குப் பின், உக்ரைன் தலைநகர் கீவ்வில், கொலைக்குற்றம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரின் வீட்டை பொலிசார் சோதனையிட்டுள்ளனர். அப்போது அந்த நபர், அலமாரியில் விலையுயர்ந்த ஒரு ஓவியம் இருப்பதாகவும், அதை கவனமாக கையாளுமாறும் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
விசாரணையில், அது பிரான்சில் திருடப்பட்ட ஓவியம் என்பது தெரியவந்துள்ளது.
அந்த நபரை விசாரிக்கும்போது, அந்த ஓவியத்தைத் திருடியவர் வாடிம் (Vadym Huzhva, 64) என்பவர் என்று கூறியுள்ளார் அந்த நபர்.
அந்த வாடிம் அந்த நேரத்தில் வியன்னா நகரில் ஓவியம் ஒன்றைத் திருடியதற்காக ஆஸ்திரிய நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார்.
அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.
தற்போது, அவர் மீதான விசாரணை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்றில் துவக்கப்பட்டுள்ளது.