பிரான்ஸ் ஓய்வூதிய போராட்டங்களைப் பயன்படுத்தி பட்டப்பகலில் கொள்ளையடித்த கும்பல்
பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை அரசு உயர்த்துவதை எதிர்த்து பிரான்சில் நடந்துவரும் போராட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டு, ஒரு கும்பல் தங்கக்காசுகளையும் தங்கக்கட்டிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
தங்கத்தைக் கொள்ளையடித்த கும்பல்
பிரான்சில் நடந்துவரும் ஓய்வூதிய வயது அதிகரிப்பு எதிர்ப்பு போராட்டங்களின் நடுவே, Rennes நகரில் அமைந்துள்ள தங்கக்காசுகள் விற்கும் கடை ஒன்றில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியது.
அந்தக் கடையின் மேலாளரான பெண், கடையின் கதவுகளை மூடிவைத்துவிட்டு, கடையின் அடித்தளத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, மேலே ஏதோ பயங்கர சத்தம் கேட்பதைக் கவனித்துள்ளார் அவர்.
Photo by BERTRAND GUAY / AFP
மேலே வந்து பார்க்கும்போது, கடையின் கண்ணாடி ஜன்னல்களில் மூன்று உடைந்துள்ளதைக் கவனித்துள்ளார் அந்தப் பெண்.
வெளியே போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றுகொண்டிருக்க, கடைக்கு வெளியே சென்று எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம் என அவர் கதவைத் திறக்க, அதற்கே காத்திருந்ததுபோல இரண்டு பேர் கடைக்குள் ஓடிவந்துள்ளார்கள்.
அவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணைப் பிடித்துவைத்துக்கொள்ள, மற்றவர் தங்கக்காசுகளையும் தங்கக்கட்டிகளையும் அள்ளிக்கொண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரும் திருடிச்சென்ற தங்கத்தின் மதிப்பு 25,000 யூரோக்கள்!
பொலிசார் அந்த இருவரையும் தேடிவருகிறார்கள்.