ஆப்கன் மக்கள் போர்வையில் பிரான்சுக்குள் ஊடுருவினாரா தாலிபான் ஆதரவாளர்?: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்கள்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு பணி புரிந்த தங்கள் நாட்டு மக்களையும், தங்களுக்கு உதவிய ஆப்கன் நாட்டவர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
சில நாடுகள், ஒரு படி மேலே போய், ஆப்கானிஸ்தானில் வாழ விரும்பாத அந்நாட்டு மக்களையும் மீட்டு தங்கள் நாடுகளுக்கு அழைத்துவருகின்றன.
ஆனால், அப்படி நல்லெண்ணத்துடன் செயல்படும் நாடுகளுக்கு புதிதாக ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதோ என எண்ண வைத்துள்ளது பிரான்சில் நடந்துள்ள ஒரு விடயம்.
தாலிபான்களால் அச்சுறுத்தல் உள்ள ஆப்கன் மக்களை அகன்ற கைகளுடன் தங்கள் நாட்டுக்கு வரவேற்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்ததைத் தொடர்ந்து, சுமார் 1,300 ஆப்கன் நாட்டவர்களை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டது.
ஆனால், அப்படி தாலிபான்களுக்குத் தப்பி வரும் மக்கள் போர்வையில் தாலிபான் ஆதரவாளர்களும் நுழைந்திருக்கலாமோ என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, காபூலிருந்து மீட்கப்பட்ட ஒருவர் பிரான்ஸ் அரசின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தாலிபான்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சதேகத்தின் பேரில் அவர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், காபூலிலுள்ள பிரான்ஸ் தூதரகத்திலுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையின்போது, இந்த நபர் மீட்புக்குழுவினருக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளார். ஆகவே, அவரையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளாரகள்.
ஆனால், பிரான்ஸ் உளவுத்துறை அவரைக் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவருக்கும், அந்த நான்கு பேருக்கும் தாலிபான்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
அதுபோக, தான் தாலிபான் உறுப்பினராகவும், காபூலில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் ஆயுதம் தாங்கி தலைமை பொறுப்பில் பணியாற்றியதாகவும் அந்த நபரே ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சரக மட்டத்திலான ஆவணம் ஒன்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.