விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்த அவசர செய்தி: குவியும் பாராட்டுகள்
பிரான்சில், விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்றுகொண்டிருந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒரு அவசர செய்தி கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, உடனடியாக அவர்கள் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்த அவசர செய்தி
கிழக்கு பிரான்சிலுள்ள Doubs என்னுமிடத்திலுள்ள ஒரு கால்பந்து அணி, பயிற்சிக்கு செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்த நிலையில், அதற்கு முன் உங்களுக்கு வேறொரு வேலை உள்ளது என்று கூறியுள்ளார் அணியின் பயிற்சியாளரான Germain Miny.

என்ன ஏது என்று கேட்காமலே உடனடியாக அவருடன் புறப்பட்டுள்ளார்கள் அவரது அணியினர்.
அவர்களை Miny அழைத்துச் சென்றது, Maîche என்னும் முதியோர் இல்லத்துக்கு. அதாவது, அந்த முதியோர் இல்லத்தில் லிஃப்ட்கள் பழுதாகியுள்ளன.
அதனால், கீழேயிருந்து தங்கள் அறைகளுக்குச் செல்வதில் அந்த முதியவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இந்த விளையாட்டு வீரர்கள் மெல்ல, பத்திரமாக அந்த முதியவர்களை சக்கர நாற்காலியுடன் தூக்கிக் கொண்டு போய் அவரவருடைய அறைகளில் விட்டுள்ளார்கள்.
அரை மணி நேரத்தில் அனைவரும் அவரவர் அறையில் கொண்டு விடப்பட, கடைசியாக அனைவருக்கும் பியர் கொடுத்துள்ளார்கள் அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள்.
ஆனால், அந்த அணி வீரர்கள் நல்ல பிள்ளைகளாக, ஐயையோ, நாங்கள் விளையாட்டுப் பயிற்சிக்குச் செல்கிறோம், பியர் அருந்தக்கூடாது என்று கூறிவிட்டார்கள் என்கிறார் Miny.
அடுத்த நாள் அந்த லிஃப்ட்கள் எல்லாம் பழுதுபார்க்கப்பட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
விடயம் என்னவென்றால், அடுத்தடுத்த நாட்களில் அந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு செய்திகள் வரத் துவங்கியுள்ளன. அவர்களுடைய செயல் அதிக அளவில் ஊடகங்களின் கவனம் ஈர்த்துள்ளது.
ஊடகங்களில் அந்த செய்திகள் வந்ததால் அந்த அணியினர் மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக, சோகம் அடைந்துள்ளார்கள்.
காரணம், நாங்கள் செய்தது ஒரு சிறிய உதவி, அது ஒரு சாதாரண உதவி. ஆனால், அதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கிறது என்றால், இப்படி உதவி செய்வது அரிதான விடயமாகிவிட்டதா என்று கேட்கிறார் Miny.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |