இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு: பிரான்ஸ் பிரதமர் தலை தப்புமா?
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில், இன்று பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில், அவரது தலை தப்புவது சந்தேகமே என கருதப்படுகிறது.
இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவருகிறார் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ (Francois Bayrou).
நாட்டை கடனிலிருந்து மீட்கும் தனது திட்டம் தொடர்பில் இன்று, அதாவது, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார் பிரதமர் பேய்ரூ.
விடயம் என்னவென்றால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பேய்ரூவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வாக்கெடுப்பில் பேய்ரூ தோல்வியை சந்திப்பாரானால், பிரான்ஸ் அரசு கவிழும் அபாயம் உருவாகியுள்ளது.
வாக்கெடுப்பில் பேய்ரூ தோல்வியை சந்தித்து, பிரான்ஸ் அரசு கவிழுமானால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று இடதுசாரிக் கட்சி ஒன்று குரல் கொடுத்துவருகிறது.
உலக அரசியலில் பாதிப்பு
அப்படி பிரான்சில் ஆட்சி மாறும் பட்சத்தில், National Rally கட்சி பதவி அமைக்க வாய்ப்புள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உக்ரைன் ரஷ்யப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.
ஆனால், அவரது ஆட்சி மாறி National Rally கட்சி ஆட்சி அமைக்குமானால், அக்கட்சி ரஷ்ய ஆதரவுக் கட்சி என்பதால், அதற்குப் பிறகு உக்ரைன் பிரான்சிடம் ஆதரவை எதிர்பார்க்கமுடியாது.
ஆக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கும் பிரதமர் மீதான இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரான்ஸ் அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் மாற்றங்களை உருவாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |