பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா உறுதி! பிரதமர் அலுவலகம் தகவல்
பிரான்ஸ் நாட்டில் கோவிட்-19 தொற்று அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் ஜீன் காஸ்டெக்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை நான்காவது அலை தாக்கியுள்ள நிலையில், பிரான்ஸ் முழுவதும் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று (திங்கட்கிழமை) அண்டை நாடான பெல்ஜியத்திற்கு சென்று திரும்பினார். அதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், வரும் 10 நாட்களுக்கு தனது கால அட்டவணையை மாற்றியமைத்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸ்டெக்சுக்கு ஏதேனும் வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து பிரதமரின் தலைமையக அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தகவல்களின் படி, அவர் பிரஸ்ஸல்ஸில் பெல்ஜிய பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூவுடனான சந்திப்பிலிருந்து திரும்பிய பின்னர், காஸ்டெக்ஸின் மகள்களில் ஒருவருக்கு நேற்று கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைட் தொடர்ந்து, காஸ்டெக்ஸ் இரண்டு சோதனைகளை எடுத்தார், அவை இரண்டும் நேர்மறையானவை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பெல்ஜிய மாநில ஒளிபரப்பாளர் RTFB படி, பெல்ஜியம் நட்டு பிரதமர் செவ்வாயன்று சோதிக்கப்படுவார் என்றும், முடிவுக்காக காத்திருக்கும்போது சுயமாக தனிமைப்படுத்தப்படுவார் என்றும் டி குரூவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரான்சின் மக்கள் தொகையில் 75% தடுப்பூசி போடப்பட்டாலும், சமீபத்திய வாரங்களில் வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை விரைவாக உயர்ந்துள்ளது.
பிரான்சில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் வைரஸுடன் தொடர்புடைய இறப்புகள் அதிகரித்து வருகின்றன.