பதவியைத் தக்கவைக்க பிரான்ஸ் பிரதமர் வித்தியாசமான முயற்சி
பிரான்ஸ் பிரதமர், ஆட்சி கவிழாமல் தடுப்பதற்காக வித்தியாசமான முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய திணறும் பிரதமர்கள்
பிரான்ஸ் அரசுக்கு சுமார் 3 ட்ரில்லியன் யூரோக்கள் அளவுக்கு கடன் உள்ளது. அரசை கடனிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க பிரதமர்கள் முன்வைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள பிற கட்சிகள் மறுக்கின்றன.

தனிப்பெரும்பான்மை இல்லாததால், ஆளும் கட்சி பிற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து நிற்க, பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிடாமல் தொடர்ந்து தடுத்துவருகின்றன பிற கட்சிகள்.
அதையும் மீறி பட்ஜெட் தாக்கல் செய்தால், அல்லது திட்டங்களை முன்வைத்தால், பிரதமர் மீது நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டுவருகின்றன மற்ற கட்சிகள்.
அவ்வகையில், முந்தைய இரண்டு பிரதமர்கள் தங்கள் பதவியை இழந்துவிட்டார்கள்.

இதற்கிடையில், அரசின் நிலையற்ற தன்மையைக் காரணம் காட்டி, எப்படியாவது ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை பதவி விலகச் செய்ய முயற்சித்துவருகின்றன எதிர்க்கட்சிகள்.
ஆனால், அவரோ, தன் பதவிக்காலம் முடியும் வரை பதவி விலகமாட்டேன் என உறுதியாகக் கூறிவிட்டார்.
இப்படி பட்ஜெட்டும் நிறைவேறாமல், நாட்டில் உருப்படியாக திட்டங்கள் எதுவும் செயல்படாமலும் இருப்பதால், பொருளாதாரம் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் வித்தியாசமான முயற்சி
இந்நிலையில், பிரான்சின் தற்போதைய பிரதமரான செபாஸ்டியன் (Sebastien Lecornu), ஆட்சி கவிழாமல் தடுப்பதற்காக வித்தியாசமான முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளார்.

ஆம், பட்ஜெட் பிரச்சினையை தீர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பூட்டிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார் செபாஸ்டியன்.
அதற்காக, பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு தனது அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
அவர்கள் பிரதமரின் திட்டத்துக்கு ஒத்துழைத்தால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம். இல்லையென்றால், மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவார்கள். பிரதமர் பதவி இழக்கலாம், ஆட்சி கவிழலாம், அதனால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் நிலை உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |