பிரான்சில் 35 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த தொடர் கொலைகாரன் தற்கொலை! கடிதத்தில் எழுதிவைத்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்
பிரான்சில் 35 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தொடர் கொலைகாரன், கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் 1980-களில் இருந்து இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த தொடர் கொலைகாரன், கடந்த புதன்கிழமை Montpellier அருகில் Grau-du-Roi பகுதியில் அவரது வீட்டில் தற்கொலை செய்த நிலையில், பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டுகளாக 'Le Grele' அல்லது 'the pockmarked killer' (முகத்தில் பல குழி அடையாளங்கள் கொண்டகொலைகாரன்) என்று அழைக்கப்பட்டுவந்த இந்த தொடர் கொலைகாரன் குறித்து, சமீபத்தில் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பிரெஞ்சு பொலிஸாரின் பல ஆண்டுகால தீவிர விசாரணைக்கு பிறகு, கொலைகாரன் ஒரு காவல்துறை அதிகாரி, குறிப்பாக 1986 முதல் 1994 காலக்கட்டத்தில் பாரிஸ் நகரத்தில் இராணுவ பிரிவின் கீழ் வரும் ஒரு பொலிஸ் அதிகாரி (Gendarme) என கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக, குறிப்பிட்ட காலகட்டத்திலும் தற்போதும் பணியில் இருக்கும் சுமார் 750 அதிகாரிகளுக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
பொலிஸார், கொலைகாரனை கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நிலையில், பிரான்கோயிஸ் வெரோவ் (Francois Verove) எனும் 59 வயது முன்னாள் காவல்துறை அதிகாரி அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளார், மேலும் தனது டிஎன்ஏ ஆதாரங்களையும் சேகரித்து வைத்துவிட்டு இறந்துள்ளார்.
அந்த கடிதத்தில், இத்தனை ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் 'Le Grele' நான் தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.
பிறகு அவரது டிஎன்ஏ மாதிரிகளையும், சம்பவ இடங்களில் சேகரிக்கப்பட்ட கொலையாளியின் டிஎன்ஏ ஆதாரங்களையும் சோதனை செய்ததில் அனைத்தும் பொருந்தியுள்ளது.
இதன்முலம் அவர் தான் குற்றவாளி என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் பல வழக்குகளுடன் ஒப்பிட்டு சோதனை செய்ததில், ஏகப்பட்ட கற்பழிப்பு கொலைகளில் அவரது ஆதாரங்கள் ஒத்துப்போனது.
1986 ஏப்ரல் மாதம் 8 வயது சிறுமி என தொடங்கி, ஒரு மாதம் கழித்து 11 வயது சிறுமி, 1987-ல் 21 வயது பெண், 1987-ஆம் ஆண்டு பாரிசில் 14 வயது சிறுமி, 1994-ஆம் ஆண்டில் 11 வயது சிறுமி, 1994-ல் 19 வயது பெண் என 6 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மேலும் பல கொலை முயற்சி, கொள்ளை மற்றும் சிறார்களைக் கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன.
தற்போது அவரது கடிதத்தில் 1997-க்குப் பிறகு அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், Francois Verove தொடர்பாகவும், அவரது தற்கொலை தொடர்பாகவும் விசாரணிகளி மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.