பிரான்ஸில் தீயாய் பரவும் கலவரம்: ஜனாதிபதி மக்ரோன் விடுத்த கடும் எச்சரிக்கை
France President Macron Warns violent agitators:பிரான்சில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீயாய் பரவும் வன்முறை
பிரான்சின் முக்கிய நகரங்களில் விலைவாசி உயர்வு, மேம்பட்ட கல்வி வசதி மற்றும் சிறந்த கல்வியல் சூழல் ஆகிய பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து 50000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரிஸ், மார்சேய், டூலூஸ் மற்றும் ரென்னெஸ் ஆகிய நகரங்களில் முகமூடி அணிந்த வன்முறை குழுக்களால் போராட்டங்களில் மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது.

பொதுச்சொத்துகளுக்கு தீ வைப்பது, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற வன்முறையில் ஈடுபட்ட 400 பேர் இதுவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
இந்நிலையில் பிரான்ஸ் குடியரசில் எப்போதும் வன்முறைக்கு இடமில்லை என்று பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் கலவரங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், கொள்ளையடித்தல், அரசு அலுவலகங்களை குறிவைத்து தாக்குதல் போன்ற வன்முறை நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆட்சியர் அலுவலகங்கள், நகர மன்றங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்த பாடுபடும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் வன்முறையாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய வன்முறையாளர்களால் அமைதியான முறையில் கோரிக்கைகளை முன்வைக்கும் சாதாரண மக்களின் உரிமைகளும் பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.