பிரான்சில் விளையாட்டாக ஜனாதிபதி QR குறியீடை பயன்படுத்திய இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் சுகாதார சீட்டில் உள்ள க்யூஆர் குறியீட்டை பயன்படுத்திய இளைஞனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் அங்கு ஒரு சில கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அப்படி ஒரு கட்டுப்பாடு தான், மருத்துவமனைகளுக்கு சென்றால், சுகாதார பாஸ் அதாவது, pass sanitaire கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்செயில் இருக்கும் 9-ஆம் வட்டாரத்தில், 19 வயது மதிக்கத்தக்க இளைஞன், கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருக்கும் Sainte-Marguerite மருத்துவமனைக்கு சென்றுள்ளான்.
அப்போது அங்கிருந்த மருத்துவ குழு அவரிடம் சுகாதார பாஸ் உள்ளதா என்று கேட்ட போது, நான் பாஸ் கொண்டு வரவில்லை, ஆனால் அதில் உள்ள QR குறியீடு வைத்திருப்பதாக கூறி, செல்போனில் அதை காண்பித்துள்ளான்.
அதன் பின், அந்த QR குறியீடை சோதனை செய்த போது, அது ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுடையது என்பது தெரியவர, உடனடியாக குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.
அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான் இதை விளையாட்டிற்காக செய்தேன் என்று கூறியுள்ளான்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், சமீபத்தில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் சுகாதார பாஸ் QR குறியீடு இணையத்தில் கசிந்ததால், அதை பயன்படுத்தி இளைஞன் இப்படி செய்துள்ளான் என்று கூறினர்.
மேலும், கைது செய்யப்பட்ட அந்த நபர் விடுவிக்கப்பட்டாரா? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை.