பிரான்சில் வலுக்கும் போராட்டம்: பாரிஸ் தெருக்களில் குவியும் ஆயிரக்கணக்கான மக்கள்
பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கொரோனா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்துள்ள போராட்டம் மேலும் வலுவடைந்து வ்ருகிறது.
சனிக்கிழமையன்று பாரிஸ், மார்சேய், லியோன் மற்றும் லில்லி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
பிரான்சில் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
அதன்படி, சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பார், உணவகம், சினிமா போன்ற பொது இடங்களுக்கு செல்வோருக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த புதிய விதிமுறைகள், தடுப்பூசியை விரும்பாதவர்களையம் கட்டாயப்படுத்தி, மக்களின் சுதந்திரத்தை மீறுவதாக எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், தென்மேற்கு பிரான்சில் உள்ள ஆங்லெட்டில் உள்ள ஒரு மையத்தைப் பார்வையிட்ட பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், தடுப்பூசி தான் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி என்றார்.
மேலும், எங்கள் சக குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இந்த சுகாதார நெருக்கடியை சமாளிக்க இதுவே சிறந்த வழி என்றார்.
போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், இதற்கிடையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பிரெஞ்சு மக்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவதை ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு முன், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போராட்டம் கலவரமாக மாறியது. பேரணியில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார், அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தங்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை எதிர்ப்பாளர்கள் காலால் உதைத்து பொலிசாரை நோக்கி தள்ளிவிட, தலைநகரம் போர்க்களம் போல் ஆனது குறிப்பிடத்தக்கது.