இந்தியாவுக்கு உதவ பல நாடுகளுடன் கைகோர்த்த பிரான்ஸ்!
இந்தியாவுக்கு உதவுவதற்காக ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுடன் பிரான்ஸ் இணைந்துள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய்களின் அதிகரிப்பை சமாளிக்க உதவும் வகையில் எதிர்வரும் நாட்களில் இந்தியாவுக்கு "குறிப்பிடத்தக்க" கூடுதல் ஆக்ஸிஜன் திறனை வழங்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அதிகமாக தேவைப்படும் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர்கள் உட்பட பல மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவ பிரான்ஸ் அரசு உறுதியளித்துள்ளது.
ஏற்கெனெவே ஜேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற பிற நாடுகள் இந்தியாவுக்கு உதவிவருகின்றன.
இதற்கிடையில், ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவுக்கு விரைவான உதவியை வழங்க வளங்களை திரட்டிவருகிறது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) கூறியுள்ளார்.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2,767 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது இந்தியாவின் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையின் புதிய உச்சமாகும்.
அதேபோல், 349,691 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகிலேயே பதிவான அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.