அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்துள்ள பிரான்ஸ்: சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய நிகழ்வு
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஒன்று உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
அவுஸ்திரேலியா, நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிப்பதற்காக 90 பில்லியன் டொலர்கள் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை பிரான்சுடன் செய்திருந்தது.
ஆனால், புதன்கிழமை காலை, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடமிருந்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்திருக்கிறது.
குழப்பமடைந்த பிரான்ஸ், என்ன நடக்கிறது என்று கேட்பதற்காக அமெரிக்காவை அழைக்க, சிறிது நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான நீர்மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்து அறிவித்திருக்கிறார்.
அதாவது, பிரான்சும் அவுஸ்திரேலியாவும் நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பது தொடர்பாக செய்திருந்த ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்து செய்ய, அதற்கு பதிலாக அவுஸ்திரேலியாவுக்கு நீர்மூழ்கிக்கப்பல் தயாரிப்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் உதவும் வகையில் புதிதாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வரும் பிரான்சால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஜீரணிக்க இயலவில்லை.
ஆகவே, இது துரோகம், அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்து அவுஸ்திரேலியா தங்களை முதுகில் குத்திவிட்டது என்று கூறி கொந்தளித்த பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கான தனது தூதர்களை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, இருவருக்கும் இடையில் ஏற்கனவே பிரச்சினைகள் உள்ள நிலையில், பிரித்தானியா ஒரு சந்தர்ப்பவாதி, இதைக்குறித்து பிரித்தானியாவுக்கான தூதருடன் விவாதிக்கத் தேவையில்லை என சாடியுள்ளது பிரான்ஸ்.
இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள மோதலின் காரணமாக, வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் ஆகிய இடங்களில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான நட்பின் அடையாளமாக நடத்த திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை பிரான்ஸ் ரத்து செய்துவிட்டது.
இதற்கிடையில், ஒரு பக்கம் பிரான்சுடனான ஒப்பந்தம் ஒன்றை முடிவுக்கு கொண்டு வரும் இரு நாடுகளுக்கிடையிலான ஒரு சிறு உரசல் போல இந்த சம்பவம் காணப்பட்டாலும், அதன் பின்னணியில் ஒரு பெரிய சர்வதேச அரசியல் உள்ளதை மறுக்க இயலாது.
அதாவது, சீனா இந்தோ பசிபிக் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. அது இந்திய படைகளுடன் மோதுவதும், தைவான் வான் வெளியில் விமானங்களை செலுத்துவதுமாக தன்னை பெரிதாக காட்டிக்கொள்ள முயன்று வருகிறது.
ஆகவே, அதற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் ஓரணியில் இணைந்து நிற்கிறோம் என காட்டும் ஒரு முயற்சியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
மேலும், பிரான்சின் டீசல் நீர்மூழ்கிக்கப்பல்களைவிட, இந்த அவுஸ்திரேலிய நீர்மூழ்கிக்கப்பல்கள் வேகமானவை, சத்தம் எழுப்பாமல் செலுத்தக்கூடியவை, அடிக்கடி எரிபொருள் நிரப்பும் அவசியம் இல்லை என பல சிறப்பம்சங்களையும் அவை கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.