பக்கத்து நாட்டு பாதுகாப்புக்கு பணம் கொடுக்க பிரான்ஸ் மறுப்பு: பின்னணி
பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டின்போது சுவிட்சர்லாந்தில் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது சுவிஸ் அரசு.
அதற்கான செலவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு பிரான்ஸ் அரசை சுவிஸ் அரசு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், செலவை பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் மறுத்துவிட்டது.
பின்னணி
2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évian-les-Bains என்னுமிடத்தில் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.
இந்நிலையில், சென்ற மாதம், அதாவது, ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை, அதே Évian-les-Bains என்னுமிடத்தில், G7 உச்சி மாநாடு நடைபெற்றது.
2003ஆம் ஆண்டைப்போலவே இம்முறையும் வன்முறை வெடிக்கக்கூடும் என அஞ்சிய சுவிஸ் அதிகாரிகள் அதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
மாநாடு நடைபெறும் Evian-les-Bains நகரை ஒட்டியுள்ள ஜெனீவா மாகாணத்தின் எல்லைகளில் சுமார் 30 எல்லைகள் மூடப்பட்டன.
பாதுகாப்புக்காக ஏராளமான பொலிசாரும், 4,000 ராணுவத்தினரும் ஜெனீவாவில் குவிக்கப்பட்டார்கள்.

பாதுகாப்புக்காக ஜெனீவா மாகாணம் 30 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் செலவிட்டுள்ளதாக ஜெனீவா பாதுகாப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பாதுகாப்புச் செலவுகளை பகிர்ந்துகொள்ளுமாறு சுவிஸ் அரசு பிரான்ஸ் அரசைக் கேட்டுக்கொண்டது.
அதாவது, பிரான்சில் நடைபெறும் உச்சி மாநாட்டால் சுவிட்சர்லாந்தில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுப்பதற்காக சுவிஸ் அரசுக்கு செலவு ஏற்பட்டதால், அந்த செலவை பிரான்சும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என சுவிஸ் அரசு கோரியது.
இந்த விடயம் தொடர்பில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது, என்றாலும், பிரான்ஸ் பணம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |